Saturday, August 31, 2024

சிவஞானபோதம் ஐந்தாம் சூத்திரம்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்குஅளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்தாம்தம் உணர்வின் தமியருள்காந்தம் கண்ட பசாசத்து அவையே

விளம்பிய - அறிவிக்கும்
உள்ளத்து - ஆன்மாவை 
மெய் - உடம்பு எனும் தொடுவுணர்வை ஏற்கும் கருவி 
வாய் - சுவையுணர்வை ஏற்கும் கருவி
கண் - காட்சிகளை ஏற்கும் கருவி 
மூக்கு - வாசனையை ஏற்கும் கருவி
அளந்து - ஒப்பீடு செய்து(அவ்வப்புலன்களால்)
அறிந்து அறியா - அறியமாட்டாது
ஆங்கு - அங்கே 
அவை - அந்த கருவிகள் (மெய் வாய் கண் மூக்கு)
போலத்- போலவே 
தாம்தம் - ஆன்மாக்கள் அவற்றின்
உணர்வின் - உணர்தலில் 
தமியருள் - இறைவன் அருள் 
காந்தம் கண்ட பசாசத்து - காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே 
அவையே- ஆன்மாக்களே

ஆன்மா கூறியவாறே உடம்பு கண் வாய் மூக்கு என்னும் கருவிகள் செயற்பட்டு அதனால் உணரக்கூடிய விடயங்களை அறிந்து கொள்கின்றது. ஆனால் அந்த கருவிகளால் ஆன்மாவை அறிய முடிவதில்லை. அந்த புல அறிவுக்கு உட்பட்ட பொருளாகவும் அந்த ஆன்மா இருப்பதில்லை. ஐம்புலன்களுக்கு வசப்பட்டாத ஒரு பொருளாகவே ஆன்மா இயக்குகிறது.

அதுபோலவே, ஆன்மாக்களால் அறியப்படுபவை அனைத்தும் இறைவனின் அருளினாலேயே அறிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் ஆன்மாவால் அந்த இறைவனின் அருளை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. 

காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே, இந்த ஆன்மாக்கள் அனைத்தும் இறைவனின் அருள் எல்லைக்கு உள்ளேயே இருக்கிறது.

காந்தப் புலத்தின் எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மையுள்ள ஒரு பொருள் அந்த புல எல்லைக்குளேயே இருக்கும். அதனை விலகிச் செல்லாது. காந்தம் அதனை நோக்கி ஈர்த்தது நிற்கும், அந்த இரும்புத் தன்மையுள்ள பொருள் அதனைப் பற்றி நிற்கும் புறத் தடைகளை நீக்கும் போது காந்தத்தைச் சென்று ஒட்டிக்கொள்ளும்.

அதுபோலவே ஆன்மாக்களை இறைவனின் அருளானது எப்போதும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள தயாராகவே இருக்கிறது. ஆனால் ஆன்மாக்கள் தாம் சார்ந்த பாச பந்தங்களினால் கட்டுண்டு கிடக்கின்றன. அவை தமது பாசத் தடைகளை நீக்கும் போது இறையருள் ஆன்மாவை ஆட்கொள்ளும்.



Friday, August 30, 2024

சிவஞானபோதம் நான்காம் சூத்திரம்

அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவைசந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராதுஅமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

அந்தக் - முடிவில் நிற்கும்
கரணம் - உறுப்புகள்
அவற்றினொன்று - அவற்றில் ஒன்று
அன்று - கிடையாது
அவை சந்தித்தது - அந்தக் கரணங்கள் சந்தித்தது
ஆன்மாச் - ஆன்மாவானது
சகசமலத்து - இயல்பான மலத்துடன் சேர்ந்து நிற்கையில்
உணராது - உணரமாட்டாது
அமைச்சு - அமைச்சர்கள்/அமைச்சரவை
அரசு - அரசாட்சியை
ஏய்ப்ப- செய்வது போல்
நின்று - நிற்கிறது 
அஞ்ச - அஞ்சி
அவத்தைத்தே - அவத்தைகளுடன் சேர்ந்து 

அந்தக் கரணங்கள் எவையும் ஆன்மா கிடையாது, அந்தக் கரணங்களால் அறியப்படுபவற்றை ஆன்மா சகச மலத்துடன் சேர்ந்த நிலையில் அறிவதில்லை, எல்லா அவத்தைகளிலும் இருப்பது ஆன்மா மட்டுமே. ஆன்மா முன் நின்று செய்யபடும் கரணங்களே அந்தக் கரணங்கள்.

மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும் அந்தக் கரணங்கள் எனப்படும். கரணங்கள் என்றால் உறுப்புகள் என்றும் அந்தக் கரணங்கள் என்றால் செயல்களை முடிவுறுத்தும் உறுப்புகள் என்று பொருள் கொள்ளலாம், இவை பௌதீக வடிவமற்ற உறுப்புகள் எனலாம். 

செயல்களை முடிவுறுத்தும் உறுப்பாக இருப்பது இந்த அந்தக் கரணங்களே. நாம் மனத்தால் புத்தியால் சித்தத்தால் அகங்காரத்தால் என்று ஒவ்வொன்றின் முடிவிலும் ஒவ்வொரு வகையான செயல்களைச் செய்கிறோம். அதனால் அவையே ஆன்மா என்றோ அவற்றில் ஏதோவொன்று தான் ஆன்மா என்றோ கொள்ளமுடியாது.

ஏனென்றால் இந்த அந்தக் கரணங்கள் மலமாயையால் உண்டாகும் கர்ம நிலைகளில் மட்டுமே நின்று செயற்படுகின்றது. செயல்களுக்கு உட்படாத ஆணவ மலத்துடன் மட்டுமே நிற்கும் கேவல அவத்தை நிலையில் அந்தக் கரணங்கள் எவையும் செயற்படுவது கிடையாது. கேவல அவத்தை, சகல அவத்தை, சுத்த அவத்தை என்னும் மூன்று காரண அவத்தைகளில் சகல அவத்தை யில் மாத்திரமே அந்தக் கரணங்கள் நான்கும் செயற்படுகின்றது.

அதுபோலவே ஆன்மாவின் ஐந்து காரிய அவத்தைகளைகளான நனவு(சாக்கிரம்), கனவு(சொப்பனம்), உறக்கம்(சுழுத்தி), பேருறக்கம்(துரியம்), உயிரடக்கம்(துரியாதீதம்) என்பவற்றில்; நனவு, கனவு ஆகிய இரண்டு அவத்தைகளில் மாத்திரமே மனம், புத்தி, அகங்காரம், சித்தம் போன்ற அந்தக் கரணங்கள் அனைத்தும் செயல்படும். 

உறக்கம், பேருறக்கம், உயிரடக்கம் என்னும் மூன்று அவத்தைகளிலும் இந்த அந்தக்கரணங்கள் நான்கும் செயல்படுவதில்லை. ஆனால் அந்த மூன்று நிலைகளிலும் ஆன்மா இல்லையென்று கூற முடியாது. அதனால் அந்தக் கரணங்கள் எவனையும் ஆன்மா கிடையாது. 

இந்த அந்தக் கரணங்கள் அரசன் இருக்க அவன் கட்டளைக்கு அஞ்சி நின்று அமைச்சர்கள் அரசை நடத்துவது போல, ஆன்மா முன்னிலையில் நின்று செயல்களை ஆற்றுகின்றனவே அன்றி, அவையே அரசு ஆகாது. அந்தக் கரணங்கள் செயற்படாத அவத்தைகளையும் சேர்த்து, எல்லா அவத்தைகளிலும் எது ஒன்று தலைமை தாங்கி நின்று அனைத்தையும் அனுபவிக்கிறதோ அதுவே ஆன்மா.



சிவஞானபோதம் மூன்றாம் சூத்திரம்

உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின்உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்மாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா

உளது-உள் பொருள் 
இலது- இல் பொருள்/இல்லாத பொருள்
என்றலின் - என்பதனால்
எனதுடல் என்றலின் - எனது உடல் என்பதனால்
ஐம்புலன்-மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் புலனுறுப்புகள்
ஒடுக்கம் - செயலற்ற நிலை
அறிதலின் -அறியப்படுவதால்
கண்படின் - தூங்கினால்
உண்டிவினை - வினைகளை உட்கொள்ளுதல்/ வினை நுகர்ச்சி
இன்மையின் - இல்லாமையால்
உணர்த்த -உணர்த்தும்போது
உணர்தலின்- உணரப்படுவதால் 
மாயா - நிலையற்ற
இயந்திர - செயற்படுகருவி
தனுவினுள் - உடம்பினுள்
ஆன்மா-உயிர் 

உள்பொருள் இல்பொருள் என்று நாம் கூறுவதால் அவ்வாறான இரண்டு பொருட்களை பற்றியும் ஆராய்ந்து அறியும் ஒன்று உள்ளது, அதுதான் ஆன்மா. 

எனதுடல் என்று எம் உடலை ஓர் உடமை பொருளாகவே கருதுகிறோம், அப்படியானால் அதை உடமை கொள்ளும் ஒன்று உள்ளது, அதுவே நான் என்னும் ஆன்மா. 

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்புலன்களும் தனித்தனியாக அறியும் விடயங்களை ஏதோவொன்று ஒன்றுசேர்த்து தொகுத்து அறிகிறது. அப்படி தொகுத்து அறியும் ஒன்று உள்ளது அதுவே ஆன்மா. 

நாம் தூங்கும் போது புலன் உறுப்புகள் எவையும் புலநுகர்சி செய்வதில்லை. அனால் அதை உயிர் செயற்படாத மரணத்தை ஒத்த நிலை என்றும் கூற முடியாது. தூக்கம் என்பது இறந்து உயிர்க்கும் செயற்படாடு இல்லை. நாம் தூங்கும் போதும் சுவாசம் முதலான செயற்பாடுகள் நடந்துகொண்டே இருக்கிறது. சுவாசம் தான் ஆன்மா அதுதான் புலன்களை செயற்படுத்துகிறது என்று கூறவும் முடியாது. ஏனென்றால் தூங்கும் போதும் சுவாசம் நடக்கிறது. புலனுறுப்புகள் செயல்படும் நிலையில் இருந்தும் செயல்கள் உணரப்படாமல் கிடக்கிறது. எனவே புலனுறுப்புகள் வழியாக அறியும் ஒன்று உள்ளது அதுவே ஆன்மா.

பொதுவாக இந்த ஐம்புலன்கள் வழியாகவே நாம் அனைத்தையும் அறிந்து கொள்கின்றோம். ஆனால் இந்த ஐம்புலன்களுக்கும் அகப்படாத ஒன்றை பற்றி யாரோ ஒருவர் உணர்த்தும் போது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது 

அவ்வாறெனில் உணர்த்தினால் உணர்ந்து கொள்ளும் ஒன்று இந்த நிலையற்ற உடலில் நின்று செயற்படுகின்றது அதுவே ஆன்மா என்பது. அதுவே நான்.



சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம்

அவையே தானே ஆய் இரு வினையிற்போக்கு வரவு புரிய ஆணையின்நீக்கம் இன்றி நிற்கும் அன்றே

அவையே - அவன் அவள் அது என்னும் சுட்டுப்பொருட்களின் சேர்க்கையே,
தானே - தாங்களே
ஆய் - மலப்பட்ட ஆன்மாக்களாய்
இரு விறையிற் - இரண்டு வினைகளுக்கும் அமைய (நல்வினை தீவினைகளுக்கு அமைய)
போக்கு வரவு புரிய - பிறப்பு இறப்பு எடுக்க
ஆணையின் -கட்டளையின்
நீக்கம் இன்றி - விலகுதல் இல்லாமல் 
நிற்கும் -நிலைபெற்றிருக்கும்
அன்றே - அப்பொழுதே

இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்பதே மலமாயை சேர் ஆன்மாக்களே, அவன் அவள் அது என்று சுட்டப்படும் மூன்றுவிதமான சுட்டினை உடைய ஆன்மாக்களே பிரபஞ்சம் என்னும் கூட்டுப் பொருளாக தோன்றுகிறது. 

ஆன்மாக்கள் தமது நல்வினை தீவினைகளுக்கு அமைய அவற்றின் கர்ம வினைகளை அனுபவிப்பதற்கு ஏதுவாகவும், அனுபவித்துக் கொண்டும் இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்கின்றது. ஆன்மாக்கள் அவ்வாறு இரு வினைகளுக்கும் அமைவாக பிறவிகளை எடுக்க இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற வியாபித்துள்ள இறைவனின் ஆணை செயற்படுகின்றது.

இறைவனது இந்த வியாபகமானது ஓரிடம் கூட விடுபட முடியாத வகையில் இந்த அண்டம் முழுவதும் வியாபித்து உள்ளது. இந்த அண்டத்தில் இறைவனின் ஆணைக்கு அப்பாற்பட்ட இடம் என்றோ, இறைவனின் வியாபகம் இல்லாத இடம் என்றோ ஏதொன்றும் கிடையாது. 

இந்த அண்டம் முழுவதும், அதற்குள் உள்ள அனைத்திலும் என்று இறைவன் அனைத்திலும் உட் கலந்து நின்று அனைத்து உயிர்களுக்கும் ஆணைகளை வழங்குகின்றார்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினை என்னும் இரண்டினையும் செய்கிறது என்றால், அதற்கு அமைவாகவே பிறப்புக்களை எடுக்கிறது என்றால், அதனை ஏதோ ஒன்று சார்பின்றி வழங்குதல் வேண்டும். 

ஆன்மா தானே வினைப்பயன்களை தெரிவு செய்து பிறவிக்களை எடுக்கிறது என்று கூற முடியாது. அப்படி ஆன்மாக்களே தெரிவினை மேற்கொள்ள முடியும் என்றால் தம் தீவினைகளை நீக்கி நற்பலன்களை மட்டும் எடுத்துக் கொண்டு பிறவிகளை எடுத்து விடும்.

அதனால்தான் ஆன்மாக்களே தானாகவே கர்மங்களை செய்து மாயையாக பிரபஞ்சமாக தோன்றுகிறது என்று கூறுபபோதும் அவை இறைவனின் ஆணைக்கு உட்பட்டு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.

இறைவனின் ஆணை என்பது ஆன்மாக்களை இவ்வாறு செய் என்று பணிப்பது கிடையாது. ஆன்மாக்கள் செய்யும் வினைப்பயன்களுக்கு அமைவாக, பிறவிகளை எடுக்க வைத்து அந்த பலன்களில் இருந்து நீங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி வழங்குவதேயாம். 



சிவஞானபோதம் முதலாம் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்அந்தம் ஆதி என்மனார் புலவர்

அவன் -ஆண்பாலாக சுட்டப்படுவது 
அவள் -பெண்பாலாக சுட்டப்படுவது 
அது-அஃறிணை பொருட்களாக சுட்டப்படுவது 
எனும் அவை- எனப்படும் அவையாவும் மூவினைமையின்- மூன்று வினைகளுக்கும் உட்படுகின்றமையினால்
தோற்றிய - தோற்றுவிக்கப்பட்ட
திதியே - வரையறுக்கப்பட்ட உண்மைப் பொருளே
ஒடுங்கி- ஒடுங்கிய நிலையில்
மலத்து - மலத்துள்ளே
உளதாம் - உள்ளதாம்
அந்தம் -முடிவு
ஆதி -தொடக்கம்
என்மனார் -என்றுகூறுவார்கள்
புலவர் - புலமை பெற்றவர்.

அவன் அவள் அது என்று மூன்று வகையாக சுட்டப்படுபவற்றின் சேர்க்கையே அவையாகும். இந்த பிரபஞ்சம் என்பதும் இந்த அவன் அவள் அது என்று சுட்டப்படும் பொருட்களின் கூட்டு வடிவமே. இவ்வாறு ஆண் பெண் அலி என்று சுட்டப்படும் அனைத்தும் தோன்றுதல் நிற்றல் ஒடுங்குதல் என்னும் மூன்று விதமான செயல் நிலைகளுக்கும் உட்படுகின்றது. அப்படியானால் இந்த மூன்று சுட்டுப் பொருட்களின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் இந்த மூன்று செயல் நிலைகளுக்கும் உட்படும். 

அதுபோலவே ஆண் பெண் அலி எனப்படும் மூவகை பொருட்களும் தானாகவே தோன்றியதாக இல்லாமல் ஏதோ ஒன்றில் இருந்து ஒன்று தோற்றுவிக்கப்பட்டதாகவே உள்ளது. அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து தோன்றுகிறது. ஏதோ ஒன்றினால் தோற்றுவிக்கப்படுகிறது. எனவே இவற்றின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் ஏதோ ஒன்றில் இருந்தே தோற்றும். ஏதோ ஒன்றினால் தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த ஆண் பெண் அலி என்பதாக சுட்டப்படும் பொருட்களும், அவற்றின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் தோன்றும் (பார்க்கும்) வகையிலே உள்ளது. இல்லாத பொருள் தோன்றாது, உள்ள பொருள் அழியாது, அப்படியானால் இந்த பிரபஞ்சம் என்பது ஏதோவொரு உள்பொருளில் இருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் என்பது எல்லையில்லாத பொருள் கிடையாது, அது ஒரு வரையறுக்கப்பட்ட பொருளே. அதனால் அவை வரையறுக்கப்பட்ட உண்மைப் பொருளில் இருந்து தோற்றுவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சம் படைத்தல் தோன்றுதல் நிற்றல் ஒடுங்குதல் என்னும் முத்தொழிலுக்கு உட்பட்டது என்பதால், எது எங்கே தோன்றி நிற்கிறதோ அது அங்கேயே ஒடுங்குதல் வேண்டும். அவ்வாறு ஒடுங்கிய நிலையில் இருந்தே இன்னொரு பிரபஞ்சம் தோன்றுதல் வேண்டும். ஆகையினால் இந்த பிரபஞ்சம் முழுவதும் இறுதியில் யாரால் எங்கே ஒடுக்கப்படுகிறதோ அங்கிருந்தே புதிய பிரபஞ்சத்தின் தோற்றமும் நிகழ்ந்ததாக வேண்டும். 

இந்த பிரபஞ்சம் என்பதும், அதில் உள்ள ஆண் பெண் அலி என்று சுட்டப்படும் பொருட்களும் தோன்றி நின்று ஒடுங்கும் மாயா பொருட்களே. இந்த மாயா பொருட்கள் அனைத்தும் வினைகளை ஆற்றியவாறே உள்ளது. 

இந்த பிரபஞ்சமானது இல்லாத ஒரு பொருள் கிடையாது. இந்த மாயா மலங்களுக்குள் ஒடுங்கிய நிலையில் பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்ட உண்மைப் பொருள் உள்ளது. 

பிரபஞ்சத்தின் அழிவு என்பது இந்த மாயா தோற்றத்தின் அழிவே. முற்றழிப்பின் முடிவில் இந்த மாயா பிரபஞ்சத்தின் உள்ளே ஒடுங்கி நிற்கும் உண்மைப் பொருளே எஞ்சி இருக்கும். அதுவே பிரபஞ்சத்தின் தொடக்கமாகவும் இருக்கும்.





சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...