Friday, August 30, 2024

சிவஞானபோதம் நான்காம் சூத்திரம்

அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவைசந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராதுஅமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே

அந்தக் - முடிவில் நிற்கும்
கரணம் - உறுப்புகள்
அவற்றினொன்று - அவற்றில் ஒன்று
அன்று - கிடையாது
அவை சந்தித்தது - அந்தக் கரணங்கள் சந்தித்தது
ஆன்மாச் - ஆன்மாவானது
சகசமலத்து - இயல்பான மலத்துடன் சேர்ந்து நிற்கையில்
உணராது - உணரமாட்டாது
அமைச்சு - அமைச்சர்கள்/அமைச்சரவை
அரசு - அரசாட்சியை
ஏய்ப்ப- செய்வது போல்
நின்று - நிற்கிறது 
அஞ்ச - அஞ்சி
அவத்தைத்தே - அவத்தைகளுடன் சேர்ந்து 

அந்தக் கரணங்கள் எவையும் ஆன்மா கிடையாது, அந்தக் கரணங்களால் அறியப்படுபவற்றை ஆன்மா சகச மலத்துடன் சேர்ந்த நிலையில் அறிவதில்லை, எல்லா அவத்தைகளிலும் இருப்பது ஆன்மா மட்டுமே. ஆன்மா முன் நின்று செய்யபடும் கரணங்களே அந்தக் கரணங்கள்.

மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் நான்கும் அந்தக் கரணங்கள் எனப்படும். கரணங்கள் என்றால் உறுப்புகள் என்றும் அந்தக் கரணங்கள் என்றால் செயல்களை முடிவுறுத்தும் உறுப்புகள் என்று பொருள் கொள்ளலாம், இவை பௌதீக வடிவமற்ற உறுப்புகள் எனலாம். 

செயல்களை முடிவுறுத்தும் உறுப்பாக இருப்பது இந்த அந்தக் கரணங்களே. நாம் மனத்தால் புத்தியால் சித்தத்தால் அகங்காரத்தால் என்று ஒவ்வொன்றின் முடிவிலும் ஒவ்வொரு வகையான செயல்களைச் செய்கிறோம். அதனால் அவையே ஆன்மா என்றோ அவற்றில் ஏதோவொன்று தான் ஆன்மா என்றோ கொள்ளமுடியாது.

ஏனென்றால் இந்த அந்தக் கரணங்கள் மலமாயையால் உண்டாகும் கர்ம நிலைகளில் மட்டுமே நின்று செயற்படுகின்றது. செயல்களுக்கு உட்படாத ஆணவ மலத்துடன் மட்டுமே நிற்கும் கேவல அவத்தை நிலையில் அந்தக் கரணங்கள் எவையும் செயற்படுவது கிடையாது. கேவல அவத்தை, சகல அவத்தை, சுத்த அவத்தை என்னும் மூன்று காரண அவத்தைகளில் சகல அவத்தை யில் மாத்திரமே அந்தக் கரணங்கள் நான்கும் செயற்படுகின்றது.

அதுபோலவே ஆன்மாவின் ஐந்து காரிய அவத்தைகளைகளான நனவு(சாக்கிரம்), கனவு(சொப்பனம்), உறக்கம்(சுழுத்தி), பேருறக்கம்(துரியம்), உயிரடக்கம்(துரியாதீதம்) என்பவற்றில்; நனவு, கனவு ஆகிய இரண்டு அவத்தைகளில் மாத்திரமே மனம், புத்தி, அகங்காரம், சித்தம் போன்ற அந்தக் கரணங்கள் அனைத்தும் செயல்படும். 

உறக்கம், பேருறக்கம், உயிரடக்கம் என்னும் மூன்று அவத்தைகளிலும் இந்த அந்தக்கரணங்கள் நான்கும் செயல்படுவதில்லை. ஆனால் அந்த மூன்று நிலைகளிலும் ஆன்மா இல்லையென்று கூற முடியாது. அதனால் அந்தக் கரணங்கள் எவனையும் ஆன்மா கிடையாது. 

இந்த அந்தக் கரணங்கள் அரசன் இருக்க அவன் கட்டளைக்கு அஞ்சி நின்று அமைச்சர்கள் அரசை நடத்துவது போல, ஆன்மா முன்னிலையில் நின்று செயல்களை ஆற்றுகின்றனவே அன்றி, அவையே அரசு ஆகாது. அந்தக் கரணங்கள் செயற்படாத அவத்தைகளையும் சேர்த்து, எல்லா அவத்தைகளிலும் எது ஒன்று தலைமை தாங்கி நின்று அனைத்தையும் அனுபவிக்கிறதோ அதுவே ஆன்மா.



No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...