உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்இருதிறன் அல்லது சிவசத்தாம் எனஇரண்டு வகையின் இசைக்குமன் உலகே
அசத்து - மாயப்பொருள்/ அசத்து
எனின் - என்றால்
உணராது- உணரமாட்டாது
இன்மையின் - இல்லை என்றால்
இருதிறன் - சத்து அசத்து என்னும் இரண்டையும் அறியும் தன்மையுள்ள அல்லது - அது தவிர்த்து
சிவசத்தாம் - சிவ மெய்ப்பொருளாம்
என- என்று
இரண்டு வகையின் - இரண்டு வகையில் (அறியப் படாததாகவும் அறியக் கூடியதாகவும் உள்ளது)
இசைக்குமன் உலகே - என்று கூறுகின்றது நிலை பெற்றவர் உலகம்
உணரப்படும் உருவினை உடைய பொருட்கள் அனைத்தும் அசத்து எனில், அவ்வாறு உணரப்படாத அனைத்தும் இல் பொருள் எனில், அசத்தினால் எதனையும் உணர்ந்து கொள்ள முடியாது, இல்லாத ஒன்றினால் எதனையும் உணர்ந்து கொள்ள முடியாது.
ஆனால் உணர்ந்து கொள்ளும் ஒன்று உள்ளது. அதுபோலவே உணர்த்தும் ஒன்றும் உள்ளது. ஆகையினால் உணருரு இல்லாத இரண்டு பொருட்கள் உணரப்படாத நிலையில் உள்ளது.
உண்மை பொய் என்ற இரண்டையும் அறியக்கூடிய இருதிறன் உள்ள பொருளான ஆன்மா, மற்றும் ஆன்மா அல்லாத சிவமாகிய மெய்ப்பொருள் என்பன உணரப் படாததாகவும், உணரக் கூடியதாகவும் என இரண்டு வகையிலும் இருக்கிறது என்று கூறுகின்றனர் அவ்வாறான பொருள் நிலையை அறியப் பெற்றவர்கள்.
எமது புல உறுப்புகளால் அறியப்படுபவை அனைத்தும் அசத்து என்னும் மாயப் பொருட்களேயாம். எமது புலன்களுக்கு புலப்படாத அறியப்படாதவற்றை இல்பொருள் என்று கூற முடியாது.
இறைவனாகிய மெய்பொருள் புல அறிவுக்கு எட்டக்கூடிய சடப்பொருள் கிடையாது. புல அறிவுக்கு அகப்படாததால் இறைவன் என்பது இல்லாத ஒரு பொருளும் கிடையாது. அதாவது இறைவன் என்பது இல்லை என்று கூற முடியாது.
ஆன்மா மற்றும் இறைவன் என்பவை புல அறிவுக்கு அகப்படாததாக இருந்தாலும், இறை அருளால் ஆன்மா தன்னையும், இறையருளையும் அறியக்கூடியதாகவும் உள்ளது.
ஆன்மா தன் இயல்பான ஆன்ம அறிவால், புலன்களை துணையாக கொண்டு தன்னையோ இறைவனையோ அறிய முடியாது. இறைவனின் ஞானத்தை துணையாக கொண்டு அது தன்னையும் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் ஆன்மா மற்றும் இறைவன் என்பவை பொதுவாக அறியப்படாத ஒன்றாக இருந்தாலும், அறியக்கூடிய பொருளாகவே இருக்கிறது என்று அவற்றை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment