Saturday, October 5, 2024

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே

காணும் - பார்க்கும்
கண்ணுக்குக் - கண்களுக்கு
காட்டும் - காணச் செய்கின்ற
உளம் போல்- ஆன்மா போல்
காண - பார்க்கின்ற 
உள்ளத்தை - ஆன்மாவை
கண்டு - பார்த்து
காட்டலின் - (ஆன்மாவை) பார்க்கச் செய்தலின் 
அயரா - சோர்வில்லாத
அன்பின் - அன்பினால் வெளிப்படும்
அரன் கழல் - இறைவனின் அருளானது
செலுமே - (ஆன்மாவினுள்)அதனுள் செல்லும் 

கண்களால் ஒரு காட்சி காணப்படுகிறது என்றால் அதை காண்பது ஆன்மாவே. ஆனால் கண்ணின் துணைகொண்டு ஆன்மா அந்த காட்சியை காண்கின்றது.  அதுபோல ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது எனில் அது இறையருளினாலேயே ஆகும். 

ஆன்மாவிற்கு காட்சியை கண்டு காட்டுவது கண்கள். ஆன்மாவிற்கு ஆன்மாவை கண்டு காட்டுவது இறையருள்.

ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது என்றால், அது இறை அருளாலேயே தன்னை கண்டுகொள்கிறது.

அவ்வாறு இறையருளினால் ஆன்மா தன்னை அறிந்து கொள்கிறது என்றால், ஆன்மா இறையருளைச் சார்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது என்று கொள்ளவேண்டும். அந்த நிலையில் ஆன்மாவைச் சென்று இறையருள் சேர ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால் ஆன்மா என்பது சார்ந்ததன் தன்மையினை பெறும் இயல்புள்ளது. அதனால்தான் பாசத்தினால் கட்டுண்ட நிலையில் எதையும் உணராமல் நின்றது. 

இந்த உலக வாழ்க்கையில் இந்த புலன்களை சார்ந்து நிற்கையில் புலன்களுக்கு கட்டுப்பட்டு நின்றது. புலன் இன்பத்திற்காக கர்மங்களுக்கு ஆட்பட்டு நின்றது. 

அதுபோலவே இறையருளைச் சார்ந்தது நின்று தன்னை உணரும் போது, அது இறையருளால் வயப்பட்ட நிலைக்கு செல்லும். ஆன்மாவின் முன்னைய இயல்பு நீங்க இறையருளின் இயல்பு உட்செல்ல ஆரம்பித்தது விடும்.

ஆன்மா இறையருளைச் சார்ந்து தன்னை அறிந்து நிற்கும் போது, அந்த நிலையில் நிலைத்திருக்கும் போது, இறையருள் ஆன்மாவைச் சென்று நிரப்பிவிடும். 

அந்த நிலையில் ஆன்மாவின் இயல்பென்பது இறையருளின் இயல்பு என்பதாகிவிடும்.



No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...