அவனே தானே ஆகிய அந்நெறிஏகன் ஆகி இறைபணி நிற்கமலமாயை தன்னொடு வல்வினை இன்றே
தானே ஆகிய - ஆன்மா ஆகிய
அந்நெறி - அந்த சமயத்தில்
ஏகன் ஆகி - ஒருவனான ஆகி
இறைபணி நிற்க - முற்றுணர்ந்து கர்மங்களற்று நிற்க
மலமாயை தன்னொடு - மல மாயைகளுடன் சேர்ந்து
வல்வினை இன்றே - நீங்காத கர்ம வினைகளும் இல்லாமல் போய்விடும்
உடல் என்ற மலமாயை சார்ந்து நிற்கும் ஆன்மாவின் மாயை விலகும் போது அங்கே ஆன்மா மட்டுமே எஞ்சி நிற்கும். அப்போது உடல் செயல்கள் இல்லாமல் ஆன்மாவின் செயற்பாடுகள் மட்டுமே இருக்கும்.
அதுபோலவே ஆன்மா தன் இயல்புகளை நீக்கிவிட்டால் அங்கே ஆன்மா செயற்படுவது நின்றுவிடும். இறைவனின் செயல்கள் மட்டுமே நடக்கும்.
ஒரு ஆன்மா தான் சார்ந்த மாயையில் இருந்தும், நான் என்ற ஆன்மாவின் அகங்கார நிலையில் இருந்தும் விடுபடும் போது அங்கே இறைவன் என்னும் ஒரு பொருள் மட்டுமே எஞ்சி இருக்கும்.
நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது,
நான் இறைவன் என்று ஆகுவது,
நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது இவ்வாறு மூன்று நிலைகளைப் பற்றி பேசப்படும். இவ்வாறு ஆகுதல் அத்வைதம் எனப்படும்.
நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது என்றால் ஆன்மா தன் இயல்புடன் இறைவனைச் சேர்ந்து நிற்பது.
நான் இறைவன் ஆகுவது என்றால் ஆன்மாவே இறைவனாக ஆகுவது.
நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது என்றால், ஆன்மா தன் இயல்புகளை நீக்க இறைவனின் இயல்பு அதை நிரப்புதல் எனலாம்.
ஏகன் ஆகி இறைபணி நிற்க என்று இங்கே குறிப்பிடப்படுவது, ஆன்மா தன்னியல்புகளை நீக்க இறைவனின் இயல்புகள் அதை ஆட்கொண்டு நிற்றல் என்பதாகும். இந்நிலையில் ஆன்மாவின் செயற்பாடுகள் அது சார்ந்த மாயைகள் என்று அனைத்தும் நீங்கிவிடும்.
இறை நிலையின் முன்னிலையில் மாயையும் கன்மமும் இல்லை ஆணவமும் இல்லை என்னும் போது, தன்னை இழந்து இறைநிலையால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாவிற்கு அது எப்படி இருக்க முடியும். அதனால் நான் என்பது இழக்கப்படும் போது மல மாயைகளுடன் அந்த ஆன்மாவின் வினைகளும் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment