யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்சத்தே யறியாது அசத்துஇலது அறியாஇருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா
சூனியம் - இல்பொருள்/ ஒன்றுமில்லாத பொருள்
சத்து - உண்மைப் பொருள்
எதிர் ஆகலின் - வேறாக உள்ளது எனில் (இந்த பிரபஞ்சத்திற்கு வேறாக உள்ளது எனின்)
சத்தே - உண்மைப் பொருளே
அறியாது - அறியமாட்டாது
அசத்து - உண்மையில்லாத பொருள்/ மாயை/ அறிமையால் தோன்றும் பொருள்
இலது - இல்பொருள்/ ஒன்றுமில்லாத ஒன்று
அறியா - அறியமாட்டாது
இரு திறன் - உண்மை பொய் என்ற இரண்டையும் அறியும் திறன்/ உண்மைப் பொருள் மாயை இரண்டையும் அறியும் திறன்
அறிவுளது - அறிவினை உடையது
இரண்டலா - இரண்டாகவும் இல்லாத (சத்தாகவும் அசத்தாகவும் இல்லாத)
ஆன்மா - உயிர்
இந்த பிரபஞ்சம் என்பதே இல்லாத பொருள் அது ஒரு மாயத் தோற்றம்(அசத்து), அதற்கு வேறாக உண்மைப் பொருள் (சத்து)உள்ளது என்று கூறினால், அங்கே மூன்றாவது ஒரு பொருளுக்கு இடமில்லை. ஆன்மா என்பது இந்த இரண்டில் ஒன்று ஆகிவிடும்.
ஆன்மா என்பது இல்லாத ஒன்று ஆகிவிடும், அல்லது உள்பொருளாகிய சத்தே ஆன்மா என்று ஆகிவிடும்.
ஆன்மா என்பது மெய்பொருள் என்றால் அந்த உண்மைப் பொருளுக்கு மாயை தோன்றுவதற்கு இடமில்லை, ஏனென்றால் மாயை என்பது அறியாமையால் தோன்றுவது.
அதனால் அறிவுள்ள சத்திற்கு அசத்து என்பது தோன்றமுடியாது. அவ்வாறு தோன்றினால் அது சத்து என்று அதாவது அறிவுள்ள பொருள் என்று கூற முடியாது.
அதுபோலவே ஆன்மா என்பது ஒன்றுமில்லாத இல்பொருள் என்றால், ஒன்றுமில்லாத ஒன்றால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது, ஒன்றுமே இல்லாத ஒன்றால் எப்படி ஒன்றை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுமில்லாத ஒன்றால் உண்மை பொய் என்ற இரண்டையும் அறிந்து கொள்ள முடியாது.
ஆன்மாவால் இந்த அசத்து என்னும் மாய பொருட்களை அறிய முடிகிறது. அதனால் ஆன்மா என்பது எதையும் அறிய முடியாத அசத்துப் பொருள் கிடையாது. ஆனால் ஆன்மா என்பது சத்துப் பொருளும் கிடையாது. ஆன்மா சத்து என்றால் அதற்கு இந்த மாயப் பொருட்கள் எவையும் தோன்றாது.
அதனால் ஆன்மா என்பது சத்து அசத்து என்னும் இரண்டையும் வேறுபடுத்தி அறியக்கூடிய சத்தும் இல்லாத அசத்தும் இல்லாத ஒரு பொருளாகும்.
No comments:
Post a Comment