Monday, September 9, 2024

சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம்

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டுஅன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

ஐம்புல வேடரின் - ஐம்புலன்களை கொண்டு வேட்டையாடுபவனின் (ஆன்மாவின்)
அயர்ந்தனை - களைப்புத்தன்மை/ சோர்வு (பிறவிக்களை)
வளர்ந்து எனத் - அதிகரித்தது என்று
தம் முதல் குருவுமாய்த் - இறைவனே முதல் குருவாகவும் நின்று 
தவத்தினில் - முயற்சியில்/ உழைப்பினில்
உணர்த்த - உணரச்செய்ய
விட்டு - அதனை விட்டு 
அன்னியம் - வேற்றுமை
இன்மையின் - இல்லாமல் நின்றால் 
அரன்கழல் - இறைவனின் அருள் 
செலுமே - செல்லுமே 

கற்களை கொண்டு வேட்டையாடுபவன் கல் வேடன், வில்லினைக் கொண்டு வேட்டையாடுபவன் வில் வேடன் அது போலவே ஐம்புலன்களைக் கொண்டு வேட்டையாடுபவன் ஐம்புல வேடன் எனப்படுகிறான். ஐம்புலன்களைக் கொண்டு பற்றுதல்களைச் செய்வது எது? இந்த ஆன்மா தானே.

வேட்டையாடும் வேடுவனுக்கு ஆரம்பத்தில் அது மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக இருப்பதால் ஆர்வமாக வேட்டையாடுவான். ஆனால் தொடர்ச்சியாக ஒன்றைச் செய்யும் போது அதில் சலிப்பும், நீண்ட காலமாக அதைச் செய்வதால் ஒருவித களைப்பும் உண்டாகும். 

அதுபோலவே இந்த ஆன்மாக்களுக்கு தொடர்ந்து பிறந்து வாழ்ந்து இறந்து என்ற இந்த மாயா உலக செயற்பாட்டில் களைப்பு ஏற்பட்டு சோர்வடைந்து நிற்கும். அந்த நிலையில் தான் நான் ஏன் பிறக்கிறேன், ஏன் இந்த வாழ்க்கை, என் முடிவு என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது. ஒருவனுக்கு நான் யார் என்ற கேள்வியும், எதற்காக இந்த வாழ்க்கை என்ற கேள்வியும் எழுகிறது என்றால் அவன் பல பிறவிக்களை எடுத்து வாழ்ந்து கழித்துவிட்டடான் என்று பொருள்.

ஆன்மா என்பது அறிவித்தால் அறியும் பொருள், இறைவன் அறிவிக்காமல் ஆன்மா எதனையும் அறிந்து கொள்ளாது. அப்படியானால் இந்த ஆன்மாவின் களைப்பை அறிந்து இறைவனே முதலில் அறிவித்தாக வேண்டும். 

இறைவன் எப்படி அறிவிப்பான், முதல் குருவாக  நின்று அறிவிக்கிறான் என்றால் யாரோ ஒரு குருவின் வடிவில் வந்து என்பது கிடையாது. களைப்படைந்து காணப்படும் ஆன்மா உண்மையை உணர்ந்து கொள்ள பல்வேறு விதமான முயற்சிகளை செய்யும். முயற்சியும் உழைப்பும் சேர்ந்த நிலையையே தவம் என்பார்கள். இந்த ஆன்மா அவ்வாறு உண்மையை அறிவதற்காக செய்யும் உழைப்புடன் கூடிய முயற்சியில் ஆன்மாவிற்கு அந்த உண்மை உணர்த்தப்படுகிறது.

அவ்வாறு உணர்தப்பட்ட உண்மையின் வழியே ஆன்மா விலக்காமல் நிற்கும் போது, இனைவனின் அருள் ஆன்மாவினுட் செல்லும். அதாவது இறைவனின் அருள் உள்ளே சென்றால் அங்கே மலமாயைகள் எவையும் நில்லாது. உணர்ந்த உண்மையின் வழியே நிற்கும் ஆன்மாக்கள் இறைவன் அருளால் மலமாயைகள் நீங்கி இறை இன்பத்தை அனுபவிக்கும் நிலையை அடையும்.



No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...