Friday, August 30, 2024

சிவஞானபோதம் முதலாம் சூத்திரம்

அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்அந்தம் ஆதி என்மனார் புலவர்

அவன் -ஆண்பாலாக சுட்டப்படுவது 
அவள் -பெண்பாலாக சுட்டப்படுவது 
அது-அஃறிணை பொருட்களாக சுட்டப்படுவது 
எனும் அவை- எனப்படும் அவையாவும் மூவினைமையின்- மூன்று வினைகளுக்கும் உட்படுகின்றமையினால்
தோற்றிய - தோற்றுவிக்கப்பட்ட
திதியே - வரையறுக்கப்பட்ட உண்மைப் பொருளே
ஒடுங்கி- ஒடுங்கிய நிலையில்
மலத்து - மலத்துள்ளே
உளதாம் - உள்ளதாம்
அந்தம் -முடிவு
ஆதி -தொடக்கம்
என்மனார் -என்றுகூறுவார்கள்
புலவர் - புலமை பெற்றவர்.

அவன் அவள் அது என்று மூன்று வகையாக சுட்டப்படுபவற்றின் சேர்க்கையே அவையாகும். இந்த பிரபஞ்சம் என்பதும் இந்த அவன் அவள் அது என்று சுட்டப்படும் பொருட்களின் கூட்டு வடிவமே. இவ்வாறு ஆண் பெண் அலி என்று சுட்டப்படும் அனைத்தும் தோன்றுதல் நிற்றல் ஒடுங்குதல் என்னும் மூன்று விதமான செயல் நிலைகளுக்கும் உட்படுகின்றது. அப்படியானால் இந்த மூன்று சுட்டுப் பொருட்களின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் இந்த மூன்று செயல் நிலைகளுக்கும் உட்படும். 

அதுபோலவே ஆண் பெண் அலி எனப்படும் மூவகை பொருட்களும் தானாகவே தோன்றியதாக இல்லாமல் ஏதோ ஒன்றில் இருந்து ஒன்று தோற்றுவிக்கப்பட்டதாகவே உள்ளது. அனைத்தும் ஏதோ ஒன்றில் இருந்து தோன்றுகிறது. ஏதோ ஒன்றினால் தோற்றுவிக்கப்படுகிறது. எனவே இவற்றின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் ஏதோ ஒன்றில் இருந்தே தோற்றும். ஏதோ ஒன்றினால் தோற்றுவிக்கப்படுகிறது.

இந்த ஆண் பெண் அலி என்பதாக சுட்டப்படும் பொருட்களும், அவற்றின் சேர்க்கையால் தோன்றும் பிரபஞ்சமும் தோன்றும் (பார்க்கும்) வகையிலே உள்ளது. இல்லாத பொருள் தோன்றாது, உள்ள பொருள் அழியாது, அப்படியானால் இந்த பிரபஞ்சம் என்பது ஏதோவொரு உள்பொருளில் இருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும். இந்த பிரபஞ்சம் என்பது எல்லையில்லாத பொருள் கிடையாது, அது ஒரு வரையறுக்கப்பட்ட பொருளே. அதனால் அவை வரையறுக்கப்பட்ட உண்மைப் பொருளில் இருந்து தோற்றுவிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த பிரபஞ்சம் படைத்தல் தோன்றுதல் நிற்றல் ஒடுங்குதல் என்னும் முத்தொழிலுக்கு உட்பட்டது என்பதால், எது எங்கே தோன்றி நிற்கிறதோ அது அங்கேயே ஒடுங்குதல் வேண்டும். அவ்வாறு ஒடுங்கிய நிலையில் இருந்தே இன்னொரு பிரபஞ்சம் தோன்றுதல் வேண்டும். ஆகையினால் இந்த பிரபஞ்சம் முழுவதும் இறுதியில் யாரால் எங்கே ஒடுக்கப்படுகிறதோ அங்கிருந்தே புதிய பிரபஞ்சத்தின் தோற்றமும் நிகழ்ந்ததாக வேண்டும். 

இந்த பிரபஞ்சம் என்பதும், அதில் உள்ள ஆண் பெண் அலி என்று சுட்டப்படும் பொருட்களும் தோன்றி நின்று ஒடுங்கும் மாயா பொருட்களே. இந்த மாயா பொருட்கள் அனைத்தும் வினைகளை ஆற்றியவாறே உள்ளது. 

இந்த பிரபஞ்சமானது இல்லாத ஒரு பொருள் கிடையாது. இந்த மாயா மலங்களுக்குள் ஒடுங்கிய நிலையில் பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்ட உண்மைப் பொருள் உள்ளது. 

பிரபஞ்சத்தின் அழிவு என்பது இந்த மாயா தோற்றத்தின் அழிவே. முற்றழிப்பின் முடிவில் இந்த மாயா பிரபஞ்சத்தின் உள்ளே ஒடுங்கி நிற்கும் உண்மைப் பொருளே எஞ்சி இருக்கும். அதுவே பிரபஞ்சத்தின் தொடக்கமாகவும் இருக்கும்.





No comments:

Post a Comment

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...