அவையே தானே ஆய் இரு வினையிற்போக்கு வரவு புரிய ஆணையின்நீக்கம் இன்றி நிற்கும் அன்றே
தானே - தாங்களே
இரு விறையிற் - இரண்டு வினைகளுக்கும் அமைய (நல்வினை தீவினைகளுக்கு அமைய)
போக்கு வரவு புரிய - பிறப்பு இறப்பு எடுக்க
ஆணையின் -கட்டளையின்
நீக்கம் இன்றி - விலகுதல் இல்லாமல்
அன்றே - அப்பொழுதே
இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்பதே மலமாயை சேர் ஆன்மாக்களே, அவன் அவள் அது என்று சுட்டப்படும் மூன்றுவிதமான சுட்டினை உடைய ஆன்மாக்களே பிரபஞ்சம் என்னும் கூட்டுப் பொருளாக தோன்றுகிறது.
ஆன்மாக்கள் தமது நல்வினை தீவினைகளுக்கு அமைய அவற்றின் கர்ம வினைகளை அனுபவிப்பதற்கு ஏதுவாகவும், அனுபவித்துக் கொண்டும் இந்த பிரபஞ்சமாக தோன்றி நிற்கின்றது. ஆன்மாக்கள் அவ்வாறு இரு வினைகளுக்கும் அமைவாக பிறவிகளை எடுக்க இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற வியாபித்துள்ள இறைவனின் ஆணை செயற்படுகின்றது.
இறைவனது இந்த வியாபகமானது ஓரிடம் கூட விடுபட முடியாத வகையில் இந்த அண்டம் முழுவதும் வியாபித்து உள்ளது. இந்த அண்டத்தில் இறைவனின் ஆணைக்கு அப்பாற்பட்ட இடம் என்றோ, இறைவனின் வியாபகம் இல்லாத இடம் என்றோ ஏதொன்றும் கிடையாது.
இந்த அண்டம் முழுவதும், அதற்குள் உள்ள அனைத்திலும் என்று இறைவன் அனைத்திலும் உட் கலந்து நின்று அனைத்து உயிர்களுக்கும் ஆணைகளை வழங்குகின்றார்.
ஆன்மாக்கள் நல்வினை தீவினை என்னும் இரண்டினையும் செய்கிறது என்றால், அதற்கு அமைவாகவே பிறப்புக்களை எடுக்கிறது என்றால், அதனை ஏதோ ஒன்று சார்பின்றி வழங்குதல் வேண்டும்.
ஆன்மா தானே வினைப்பயன்களை தெரிவு செய்து பிறவிக்களை எடுக்கிறது என்று கூற முடியாது. அப்படி ஆன்மாக்களே தெரிவினை மேற்கொள்ள முடியும் என்றால் தம் தீவினைகளை நீக்கி நற்பலன்களை மட்டும் எடுத்துக் கொண்டு பிறவிகளை எடுத்து விடும்.
அதனால்தான் ஆன்மாக்களே தானாகவே கர்மங்களை செய்து மாயையாக பிரபஞ்சமாக தோன்றுகிறது என்று கூறுபபோதும் அவை இறைவனின் ஆணைக்கு உட்பட்டு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.
இறைவனின் ஆணை என்பது ஆன்மாக்களை இவ்வாறு செய் என்று பணிப்பது கிடையாது. ஆன்மாக்கள் செய்யும் வினைப்பயன்களுக்கு அமைவாக, பிறவிகளை எடுக்க வைத்து அந்த பலன்களில் இருந்து நீங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி வழங்குவதேயாம்.
No comments:
Post a Comment