Saturday, October 5, 2024

சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே

காணும் - பார்க்கும்
கண்ணுக்குக் - கண்களுக்கு
காட்டும் - காணச் செய்கின்ற
உளம் போல்- ஆன்மா போல்
காண - பார்க்கின்ற 
உள்ளத்தை - ஆன்மாவை
கண்டு - பார்த்து
காட்டலின் - (ஆன்மாவை) பார்க்கச் செய்தலின் 
அயரா - சோர்வில்லாத
அன்பின் - அன்பினால் வெளிப்படும்
அரன் கழல் - இறைவனின் அருளானது
செலுமே - (ஆன்மாவினுள்)அதனுள் செல்லும் 

கண்களால் ஒரு காட்சி காணப்படுகிறது என்றால் அதை காண்பது ஆன்மாவே. ஆனால் கண்ணின் துணைகொண்டு ஆன்மா அந்த காட்சியை காண்கின்றது.  அதுபோல ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது எனில் அது இறையருளினாலேயே ஆகும். 

ஆன்மாவிற்கு காட்சியை கண்டு காட்டுவது கண்கள். ஆன்மாவிற்கு ஆன்மாவை கண்டு காட்டுவது இறையருள்.

ஆன்மா தன்னை கண்டுகொள்கிறது என்றால், அது இறை அருளாலேயே தன்னை கண்டுகொள்கிறது.

அவ்வாறு இறையருளினால் ஆன்மா தன்னை அறிந்து கொள்கிறது என்றால், ஆன்மா இறையருளைச் சார்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டது என்று கொள்ளவேண்டும். அந்த நிலையில் ஆன்மாவைச் சென்று இறையருள் சேர ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால் ஆன்மா என்பது சார்ந்ததன் தன்மையினை பெறும் இயல்புள்ளது. அதனால்தான் பாசத்தினால் கட்டுண்ட நிலையில் எதையும் உணராமல் நின்றது. 

இந்த உலக வாழ்க்கையில் இந்த புலன்களை சார்ந்து நிற்கையில் புலன்களுக்கு கட்டுப்பட்டு நின்றது. புலன் இன்பத்திற்காக கர்மங்களுக்கு ஆட்பட்டு நின்றது. 

அதுபோலவே இறையருளைச் சார்ந்தது நின்று தன்னை உணரும் போது, அது இறையருளால் வயப்பட்ட நிலைக்கு செல்லும். ஆன்மாவின் முன்னைய இயல்பு நீங்க இறையருளின் இயல்பு உட்செல்ல ஆரம்பித்தது விடும்.

ஆன்மா இறையருளைச் சார்ந்து தன்னை அறிந்து நிற்கும் போது, அந்த நிலையில் நிலைத்திருக்கும் போது, இறையருள் ஆன்மாவைச் சென்று நிரப்பிவிடும். 

அந்த நிலையில் ஆன்மாவின் இயல்பென்பது இறையருளின் இயல்பு என்பதாகிவிடும்.



சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம்

அவனே தானே ஆகிய அந்நெறிஏகன் ஆகி இறைபணி நிற்கமலமாயை தன்னொடு வல்வினை இன்றே

அவனே - இறைவனே
தானே ஆகிய - ஆன்மா ஆகிய
அந்நெறி - அந்த சமயத்தில்
ஏகன் ஆகி - ஒருவனான ஆகி
இறைபணி நிற்க - முற்றுணர்ந்து கர்மங்களற்று நிற்க
மலமாயை தன்னொடு - மல மாயைகளுடன் சேர்ந்து
வல்வினை இன்றே - நீங்காத கர்ம வினைகளும் இல்லாமல் போய்விடும்

உடல் என்ற மலமாயை சார்ந்து நிற்கும் ஆன்மாவின் மாயை விலகும் போது அங்கே ஆன்மா மட்டுமே எஞ்சி நிற்கும். அப்போது உடல் செயல்கள் இல்லாமல் ஆன்மாவின் செயற்பாடுகள் மட்டுமே இருக்கும்.

அதுபோலவே ஆன்மா தன் இயல்புகளை நீக்கிவிட்டால் அங்கே ஆன்மா செயற்படுவது நின்றுவிடும். இறைவனின் செயல்கள் மட்டுமே நடக்கும். 

ஒரு ஆன்மா தான் சார்ந்த மாயையில் இருந்தும், நான் என்ற ஆன்மாவின் அகங்கார நிலையில் இருந்தும் விடுபடும் போது அங்கே இறைவன் என்னும் ஒரு பொருள் மட்டுமே எஞ்சி இருக்கும். 

நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது,

நான் இறைவன் என்று ஆகுவது, 

நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது இவ்வாறு மூன்று நிலைகளைப் பற்றி பேசப்படும். இவ்வாறு ஆகுதல் அத்வைதம் எனப்படும்.

நான் இறைவனோடு சேர்ந்து நிற்பது என்றால் ஆன்மா தன் இயல்புடன் இறைவனைச் சேர்ந்து நிற்பது. 

நான் இறைவன் ஆகுவது என்றால் ஆன்மாவே இறைவனாக ஆகுவது. 

நான் என்பது நீங்க அங்கு இறைவன் நிற்பது என்றால், ஆன்மா தன் இயல்புகளை நீக்க இறைவனின் இயல்பு அதை நிரப்புதல் எனலாம். 

ஏகன் ஆகி இறைபணி நிற்க என்று இங்கே குறிப்பிடப்படுவது, ஆன்மா தன்னியல்புகளை நீக்க இறைவனின் இயல்புகள் அதை ஆட்கொண்டு நிற்றல் என்பதாகும். இந்நிலையில் ஆன்மாவின் செயற்பாடுகள் அது சார்ந்த மாயைகள் என்று அனைத்தும் நீங்கிவிடும். 

இறை நிலையின் முன்னிலையில் மாயையும் கன்மமும் இல்லை ஆணவமும் இல்லை என்னும் போது, தன்னை இழந்து இறைநிலையால் ஆட்கொள்ளப்பட்ட ஆன்மாவிற்கு அது எப்படி இருக்க முடியும். அதனால் நான் என்பது இழக்கப்படும் போது மல மாயைகளுடன் அந்த ஆன்மாவின் வினைகளும் நீங்கிவிடும்.



Monday, September 9, 2024

சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம்

 ஊனக்கண் பாசம் உணராப் பதியைஞானக் கண்ணினிற் சிந்தை நாடிஉராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்தண் நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ் செழுத்தே

ஊனக்கண் - குறைபாடு உடைய கண்/ மாயையை பார்க்கும் கண்
பாசம் - மாயைக்கு காரணமாக இருப்பது
உணராப் - உணராது இருக்கும்
பதியை - இறைவனை
ஞானக் கண்ணினிற் - குறைபாடு இல்லாத உண்மையை உணரும் பார்வையில்
சிந்தை - அறிவினை 
நாடி- அணுகி
உராத்து- விரைவாக 
உனைத் - உன்னை ஒரு 
தேர்த்து - சிறு துகள், மயிரிழைப் பொருள்
(தேர்த்து என்பது ஒரு நுண்ணிய அளவு முறை, மயிரிழை அளவு)
எனப் - என்று
பாசம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை
ஒருவத் - களைந்து நீக்க
தண் நிழலாம் - குளிர்ந்த நிழலான
பதி- இடம் 
விதி - விதிப்படி 
எண்ணும் - சிந்தையில் நிற்கும்
அஞ்செழுத்தே - ஐந்தெழுத்தே

எம் மானிட கண்கள் என்பது வெறும் மாயையை மட்டுமே பார்க்க கூடிய குறைபாடுடைய கண்களாகும். இந்த குறைபாடுடைய மாயக் கண்களால் உண்மையை, நாமும் நாம் இருக்கும் இந்த பிரபஞ்சங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி இருக்கும் இடமாகிய இறைவனை, அதன் இருப்பு நிலையை காண முடியாது.

அவ்வாறான இறைவனை காண்பதற்கு, குறைபாடு இல்லாத முழுமையான பார்வையுடைய அறிவுக்கண் வேண்டும். அவ்வாறான அறிவுக் கண்ணை உடையவன் உண்மையாகிய இறைவன் ஒருவனே. அவனது அறிவைப் பெற்று அவனாக நின்று அணுகினால், விரைவாக, நான் என்னும் ஆணவம் ஒரு அல்ப்பமான சிறு பொருள் என்று நீக்கப்பட்டு உண்மை உணரப்படும்.

அவ்வாறு இந்த மாயா மலங்களை ஆன்மா களைப்பின்றி களைந்து நீக்க குளிர்மை தரும் பெரு நிழலாக இருப்பது அவை உள்ளத்தில் எண்ணும் நமசிவாய என்னும் இறைவன் திருவைந்தெழுத்தே.

உடலால் ஒரு செயலைச் செய்யும் போது உடலுக்கு களைப்பு ஏற்படும். அதுபோலவே உள்ளம் ஒரு செயலைச் செய்யும் போது அதற்கும் ஒரு களைப்பு ஏற்படும். 

ஆன்மாவானது தன்னை பற்றியுள்ள மலங்களை நீக்குவது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் அனைவரும் உணர்கின்றோம். ஆனால், தூயவனாகிய இறைவனது திருநாமங்களை மனதில் இருத்திக் கொண்டு, அதனைச் செய்யும் போது உள்ளத்திற்கு உண்டாகும் அந்த பெருங்களை இல்லாமல் போய்விடும். 

அந்த இறைவனின் சிந்தனையை உள்ளம் முழுவதும் இருத்திக் கொண்டு பாசத்தை நீக்க முயற்சி செய்தால், பாசம் என்பது நீக்க முடியாத ஒரு பெரும் பொருளாக அல்லாமல், இலகுவாக நீக்கத் தக்க அல்ப்பமான ஒன்றாக ஆன்மாவிற்கு இருக்கும். 





சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம்

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டுஅன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே

ஐம்புல வேடரின் - ஐம்புலன்களை கொண்டு வேட்டையாடுபவனின் (ஆன்மாவின்)
அயர்ந்தனை - களைப்புத்தன்மை/ சோர்வு (பிறவிக்களை)
வளர்ந்து எனத் - அதிகரித்தது என்று
தம் முதல் குருவுமாய்த் - இறைவனே முதல் குருவாகவும் நின்று 
தவத்தினில் - முயற்சியில்/ உழைப்பினில்
உணர்த்த - உணரச்செய்ய
விட்டு - அதனை விட்டு 
அன்னியம் - வேற்றுமை
இன்மையின் - இல்லாமல் நின்றால் 
அரன்கழல் - இறைவனின் அருள் 
செலுமே - செல்லுமே 

கற்களை கொண்டு வேட்டையாடுபவன் கல் வேடன், வில்லினைக் கொண்டு வேட்டையாடுபவன் வில் வேடன் அது போலவே ஐம்புலன்களைக் கொண்டு வேட்டையாடுபவன் ஐம்புல வேடன் எனப்படுகிறான். ஐம்புலன்களைக் கொண்டு பற்றுதல்களைச் செய்வது எது? இந்த ஆன்மா தானே.

வேட்டையாடும் வேடுவனுக்கு ஆரம்பத்தில் அது மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக இருப்பதால் ஆர்வமாக வேட்டையாடுவான். ஆனால் தொடர்ச்சியாக ஒன்றைச் செய்யும் போது அதில் சலிப்பும், நீண்ட காலமாக அதைச் செய்வதால் ஒருவித களைப்பும் உண்டாகும். 

அதுபோலவே இந்த ஆன்மாக்களுக்கு தொடர்ந்து பிறந்து வாழ்ந்து இறந்து என்ற இந்த மாயா உலக செயற்பாட்டில் களைப்பு ஏற்பட்டு சோர்வடைந்து நிற்கும். அந்த நிலையில் தான் நான் ஏன் பிறக்கிறேன், ஏன் இந்த வாழ்க்கை, என் முடிவு என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுகிறது. ஒருவனுக்கு நான் யார் என்ற கேள்வியும், எதற்காக இந்த வாழ்க்கை என்ற கேள்வியும் எழுகிறது என்றால் அவன் பல பிறவிக்களை எடுத்து வாழ்ந்து கழித்துவிட்டடான் என்று பொருள்.

ஆன்மா என்பது அறிவித்தால் அறியும் பொருள், இறைவன் அறிவிக்காமல் ஆன்மா எதனையும் அறிந்து கொள்ளாது. அப்படியானால் இந்த ஆன்மாவின் களைப்பை அறிந்து இறைவனே முதலில் அறிவித்தாக வேண்டும். 

இறைவன் எப்படி அறிவிப்பான், முதல் குருவாக  நின்று அறிவிக்கிறான் என்றால் யாரோ ஒரு குருவின் வடிவில் வந்து என்பது கிடையாது. களைப்படைந்து காணப்படும் ஆன்மா உண்மையை உணர்ந்து கொள்ள பல்வேறு விதமான முயற்சிகளை செய்யும். முயற்சியும் உழைப்பும் சேர்ந்த நிலையையே தவம் என்பார்கள். இந்த ஆன்மா அவ்வாறு உண்மையை அறிவதற்காக செய்யும் உழைப்புடன் கூடிய முயற்சியில் ஆன்மாவிற்கு அந்த உண்மை உணர்த்தப்படுகிறது.

அவ்வாறு உணர்தப்பட்ட உண்மையின் வழியே ஆன்மா விலக்காமல் நிற்கும் போது, இனைவனின் அருள் ஆன்மாவினுட் செல்லும். அதாவது இறைவனின் அருள் உள்ளே சென்றால் அங்கே மலமாயைகள் எவையும் நில்லாது. உணர்ந்த உண்மையின் வழியே நிற்கும் ஆன்மாக்கள் இறைவன் அருளால் மலமாயைகள் நீங்கி இறை இன்பத்தை அனுபவிக்கும் நிலையை அடையும்.



Sunday, September 1, 2024

சிவஞானபோதம் ஏழாம் சூத்திரம்

யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்சத்தே யறியாது அசத்துஇலது அறியாஇருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா

யாவையும் -இந்த பிரபஞ்சம் முழுவதும்
சூனியம் - இல்பொருள்/ ஒன்றுமில்லாத பொருள்
சத்து - உண்மைப் பொருள்
எதிர் ஆகலின் - வேறாக உள்ளது எனில் (இந்த பிரபஞ்சத்திற்கு வேறாக உள்ளது எனின்)
சத்தே - உண்மைப் பொருளே
அறியாது - அறியமாட்டாது
அசத்து - உண்மையில்லாத பொருள்/ மாயை/ அறிமையால் தோன்றும் பொருள்
இலது - இல்பொருள்/ ஒன்றுமில்லாத ஒன்று
அறியா - அறியமாட்டாது
இரு திறன் - உண்மை பொய் என்ற இரண்டையும் அறியும் திறன்/ உண்மைப் பொருள் மாயை இரண்டையும் அறியும் திறன்
அறிவுளது - அறிவினை உடையது 
இரண்டலா - இரண்டாகவும் இல்லாத (சத்தாகவும் அசத்தாகவும் இல்லாத)
ஆன்மா - உயிர் 

இந்த பிரபஞ்சம் என்பதே இல்லாத பொருள் அது ஒரு மாயத் தோற்றம்(அசத்து), அதற்கு வேறாக உண்மைப் பொருள் (சத்து)உள்ளது என்று கூறினால், அங்கே மூன்றாவது ஒரு பொருளுக்கு இடமில்லை. ஆன்மா என்பது இந்த இரண்டில் ஒன்று ஆகிவிடும்.

ஆன்மா என்பது இல்லாத ஒன்று ஆகிவிடும், அல்லது உள்பொருளாகிய சத்தே ஆன்மா என்று ஆகிவிடும்.

ஆன்மா என்பது மெய்பொருள் என்றால் அந்த உண்மைப் பொருளுக்கு மாயை தோன்றுவதற்கு இடமில்லை, ஏனென்றால் மாயை என்பது அறியாமையால் தோன்றுவது. 

அதனால் அறிவுள்ள சத்திற்கு அசத்து என்பது தோன்றமுடியாது. அவ்வாறு தோன்றினால் அது சத்து என்று அதாவது அறிவுள்ள பொருள் என்று கூற முடியாது. 

அதுபோலவே ஆன்மா என்பது ஒன்றுமில்லாத இல்பொருள் என்றால், ஒன்றுமில்லாத ஒன்றால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது, ஒன்றுமே இல்லாத ஒன்றால் எப்படி ஒன்றை அறிந்து கொள்ள முடியும். ஒன்றுமில்லாத ஒன்றால் உண்மை பொய் என்ற இரண்டையும் அறிந்து கொள்ள முடியாது.

ஆன்மாவால் இந்த அசத்து என்னும் மாய பொருட்களை அறிய முடிகிறது. அதனால் ஆன்மா என்பது எதையும் அறிய முடியாத அசத்துப் பொருள் கிடையாது. ஆனால் ஆன்மா என்பது சத்துப் பொருளும் கிடையாது. ஆன்மா சத்து என்றால் அதற்கு இந்த மாயப் பொருட்கள் எவையும் தோன்றாது. 

அதனால் ஆன்மா என்பது சத்து அசத்து என்னும் இரண்டையும் வேறுபடுத்தி அறியக்கூடிய சத்தும் இல்லாத அசத்தும் இல்லாத ஒரு பொருளாகும்.



சிவஞானபோதம் ஆறாம் சூத்திரம்

 உணருரு அசத்து எனின் உணராது இன்மையின்இருதிறன் அல்லது சிவசத்தாம் எனஇரண்டு வகையின் இசைக்குமன் உலகே

உணருரு - உணரும் பொருள் 
அசத்து - மாயப்பொருள்/ அசத்து 
எனின் - என்றால்
உணராது- உணரமாட்டாது 
இன்மையின் - இல்லை என்றால் 
இருதிறன் - சத்து அசத்து என்னும் இரண்டையும் அறியும் தன்மையுள்ள அல்லது - அது தவிர்த்து 
சிவசத்தாம் - சிவ மெய்ப்பொருளாம்
என- என்று
இரண்டு வகையின் - இரண்டு வகையில் (அறியப் படாததாகவும் அறியக் கூடியதாகவும் உள்ளது) 
இசைக்குமன் உலகே - என்று கூறுகின்றது நிலை பெற்றவர் உலகம்  

உணரப்படும் உருவினை உடைய பொருட்கள் அனைத்தும் அசத்து எனில், அவ்வாறு உணரப்படாத அனைத்தும் இல் பொருள் எனில், அசத்தினால் எதனையும் உணர்ந்து கொள்ள முடியாது, இல்லாத ஒன்றினால் எதனையும் உணர்ந்து கொள்ள முடியாது. 

ஆனால் உணர்ந்து கொள்ளும் ஒன்று உள்ளது. அதுபோலவே உணர்த்தும் ஒன்றும் உள்ளது. ஆகையினால் உணருரு இல்லாத இரண்டு பொருட்கள் உணரப்படாத நிலையில் உள்ளது.

உண்மை பொய் என்ற இரண்டையும் அறியக்கூடிய இருதிறன் உள்ள பொருளான ஆன்மா,  மற்றும் ஆன்மா அல்லாத சிவமாகிய மெய்ப்பொருள் என்பன உணரப் படாததாகவும், உணரக் கூடியதாகவும் என இரண்டு வகையிலும் இருக்கிறது என்று கூறுகின்றனர் அவ்வாறான பொருள் நிலையை அறியப் பெற்றவர்கள்.

எமது புல உறுப்புகளால் அறியப்படுபவை அனைத்தும் அசத்து என்னும் மாயப் பொருட்களேயாம். எமது புலன்களுக்கு புலப்படாத அறியப்படாதவற்றை இல்பொருள் என்று கூற முடியாது.

இறைவனாகிய மெய்பொருள் புல அறிவுக்கு எட்டக்கூடிய சடப்பொருள் கிடையாது. புல அறிவுக்கு அகப்படாததால் இறைவன் என்பது இல்லாத ஒரு பொருளும் கிடையாது. அதாவது இறைவன் என்பது இல்லை என்று கூற முடியாது.

ஆன்மா மற்றும் இறைவன் என்பவை புல அறிவுக்கு அகப்படாததாக இருந்தாலும், இறை அருளால் ஆன்மா தன்னையும், இறையருளையும் அறியக்கூடியதாகவும் உள்ளது. 

ஆன்மா தன் இயல்பான ஆன்ம அறிவால், புலன்களை துணையாக கொண்டு தன்னையோ இறைவனையோ அறிய முடியாது. இறைவனின் ஞானத்தை துணையாக கொண்டு அது தன்னையும் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியும். அதனால் ஆன்மா மற்றும் இறைவன் என்பவை பொதுவாக அறியப்படாத ஒன்றாக இருந்தாலும், அறியக்கூடிய பொருளாகவே இருக்கிறது என்று அவற்றை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



Saturday, August 31, 2024

சிவஞானபோதம் ஐந்தாம் சூத்திரம்

விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்குஅளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்தாம்தம் உணர்வின் தமியருள்காந்தம் கண்ட பசாசத்து அவையே

விளம்பிய - அறிவிக்கும்
உள்ளத்து - ஆன்மாவை 
மெய் - உடம்பு எனும் தொடுவுணர்வை ஏற்கும் கருவி 
வாய் - சுவையுணர்வை ஏற்கும் கருவி
கண் - காட்சிகளை ஏற்கும் கருவி 
மூக்கு - வாசனையை ஏற்கும் கருவி
அளந்து - ஒப்பீடு செய்து(அவ்வப்புலன்களால்)
அறிந்து அறியா - அறியமாட்டாது
ஆங்கு - அங்கே 
அவை - அந்த கருவிகள் (மெய் வாய் கண் மூக்கு)
போலத்- போலவே 
தாம்தம் - ஆன்மாக்கள் அவற்றின்
உணர்வின் - உணர்தலில் 
தமியருள் - இறைவன் அருள் 
காந்தம் கண்ட பசாசத்து - காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே 
அவையே- ஆன்மாக்களே

ஆன்மா கூறியவாறே உடம்பு கண் வாய் மூக்கு என்னும் கருவிகள் செயற்பட்டு அதனால் உணரக்கூடிய விடயங்களை அறிந்து கொள்கின்றது. ஆனால் அந்த கருவிகளால் ஆன்மாவை அறிய முடிவதில்லை. அந்த புல அறிவுக்கு உட்பட்ட பொருளாகவும் அந்த ஆன்மா இருப்பதில்லை. ஐம்புலன்களுக்கு வசப்பட்டாத ஒரு பொருளாகவே ஆன்மா இயக்குகிறது.

அதுபோலவே, ஆன்மாக்களால் அறியப்படுபவை அனைத்தும் இறைவனின் அருளினாலேயே அறிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் ஆன்மாவால் அந்த இறைவனின் அருளை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. 

காந்தத்தின் புல எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மை போலவே, இந்த ஆன்மாக்கள் அனைத்தும் இறைவனின் அருள் எல்லைக்கு உள்ளேயே இருக்கிறது.

காந்தப் புலத்தின் எல்லைக்குள் நிற்கும் இரும்பு தன்மையுள்ள ஒரு பொருள் அந்த புல எல்லைக்குளேயே இருக்கும். அதனை விலகிச் செல்லாது. காந்தம் அதனை நோக்கி ஈர்த்தது நிற்கும், அந்த இரும்புத் தன்மையுள்ள பொருள் அதனைப் பற்றி நிற்கும் புறத் தடைகளை நீக்கும் போது காந்தத்தைச் சென்று ஒட்டிக்கொள்ளும்.

அதுபோலவே ஆன்மாக்களை இறைவனின் அருளானது எப்போதும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள தயாராகவே இருக்கிறது. ஆனால் ஆன்மாக்கள் தாம் சார்ந்த பாச பந்தங்களினால் கட்டுண்டு கிடக்கின்றன. அவை தமது பாசத் தடைகளை நீக்கும் போது இறையருள் ஆன்மாவை ஆட்கொள்ளும்.



சிவஞானபோதம் பதினோராம் சூத்திரம்

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்அயரா அன்பின் அரன்கழல் செலுமே காணும் - பார்க்கும் கண்ணுக்குக் - கண்களுக்கு ...